கிளிநொச்சியில் ஊழல் முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் IDH தொற்றுநோய் வைத்தியசாலை உட்பட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற நிதி நிர்வாக முறைகேடுகள் ஆரம்பப் புலனாய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை ஆணைக்குழு (RTI) மூலம் தகவல் வெளிவந்தது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் மீது குற்றம் காணப்பட்டுள்ளதாக RTI மூலம் தகவல் வெளிவந்தது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணை குழு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் மீது குற்றம் இனம்காணப்பட்டு அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
என்னால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய குறித்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் கணக்காய்வு அறிக்கைகள் மற்றும் கணக்காளரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்ப புலன்விசாரணையை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் வி.கலைச்செல்வனை தலைவராாவும், கிளிநொச்சி சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் த.ஆரணி மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ச.பிரசாத் ஆகிய இருவரையும் உறுப்பினராகவும் கொண்ட மூவரடங்கிய விசாரணை குழு தமது விசாரணையை மேற்கொண்டு ஆரம்ப புலன்விசாரணை அறிக்கையை சமர்பித்திருந்தது.
இந்த புலன்விசாரணை அறிக்கையின் பிரகாரம் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், முன்னாள் கணக்காளர், மற்றும் முகாமைத்துவ சேவை அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் என ஐவர் மீதும் குற்றம் காணப்பட்டுள்ளது எனவும்,
அவர்களுக்காக மாதிரி குற்றப் பத்திரம் ஆரம்ப புலன்விசாரணை குழுவினரால் சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஆகவே குற்றப் பத்திரமும், ஆரம்ப புலன்விசாரணை அறிக்கையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார அமைச்சு,
கிளிநொச்சி சுகாதார பணிப்பாளர் மீதான குற்றப் பத்திரம் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளாருக்கும், முன்னாள் கணக்காளர் மீதான குற்றப் பத்திரம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும், முகாமைத்துவ அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான குற்றப்பத்திரம் பிரதி பிரதம செயலாளர் நிர்வாகம் வடக்கு மாகாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும், மாகாண சுகாதார அமைச்சு தகவல் வழங்கியுள்ளது.
அதுசரி எங்க சார் அந்த மேலதிக இணைப்பாளர்? இப்ப என்ன சொல்வதாக உத்தேசம் ஐயா? ஊழல் முறைகேடுகளில் ஈடுப்படும் அதிகாரிகளை உங்களை போன்ற அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் காப்பாற்றும் வரைக்கும் நிலைமை இப்படிதான் இருக்கும்.




