குற்ற விசாரணை பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டோர் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களின் பின்னணியில் செயற்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் குறித்த உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (28) இலங்கை காவல்துறையினரால் இந்தோனேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த 5 பேருடன் இன்று பிற்பகல் 3.30 அளவில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், இன்றிரவு 7.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதனையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட குறித்த ஐவரும் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.