பெண் மருத்துவர்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கிரிக்கெட் வீரர்கள்; சமரசம் செய்ய முயற்சி
கொழும்பு 5-இல் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில், பெண் மருத்துவர்கள் குழுவொன்று குளிக்கும் காட்சிகளை அலைபேசி மூலம் ரகசியமாக வீடியோ பதிவு செய்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள், இந்த விவகாரத்தை சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இத்தகவலைத் தெரிவித்தனர்.

நாரஹேன்பிட்ட பொலிஸார் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து நாரஹேன்பிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்; வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொலிஸ் அதிகாரிகளால் அது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை.
இதன் காரணமாக, விசாரணைகளை முழுமையாக நிறைவுசெய்து, அது தொடர்பான அவதானிப்பு அறிக்கைகளை அடுத்த நீதிமன்ற அமர்வுக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பெண் மருத்துவர்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படும் முக்கியக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் மற்றும் இரண்டாவது சந்தேக நபர்களான கிரிக்கெட் வீரர்கள், கண்டி ட்ரினிட்டி கல்லூரி மற்றும் வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி ஆகிய இரண்டு பிரபலமான பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களாவர்.
இவர்களுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் சேனநாயக்க, இரு தரப்பினரின் சம்மதத்துடனும் இந்தத் தகராறை சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்ததிஸ்ஸ, இத்தகைய சமரசம் குறித்துத் தனது கட்சிக்காரர்களிடமிருந்து இதுவரை எவ்வித ஆலோசனையோ அல்லது சம்மதமோ கிடைக்கப்பெறவில்லை என்றும், இத்தகையதொரு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முன்னர் முறைப்பாட்டாளர் தரப்பிடமிருந்து தெளிவான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.