மன்னார் நகரின் பிரபல உணவகங்கள் மீது அதிரடி ; கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரிப்பு
மன்னார் நகர்ப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் வகையில், கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கிவந்த மூன்று பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அதிரடிச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பொது சுகாதார வைத்திய அதிகாரிஅவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய, குறித்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார விதிமுறைகள்
இந்த ஆய்வின்போது, அந்த உணவகங்கள் கடுமையான சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிவந்தது கண்டறியப்பட்டது.
குறிப்பாக, உணவுகள் தயாரிக்கப்படும் இடங்கள் மிகுந்த அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும் காணப்பட்டன. உணவகம் முழுவதும் ஈக்கள் அதிக அளவில் மொய்த்துக் கொண்டிருந்ததுடன், கழிவுநீர் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதிகள் இன்றியும் காணப்பட்டுள்ளது.
மேலும், சேகரிக்கப்படும் குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமை மற்றும் குறித்த உணவகங்களுக்கு உரிய சுகாதாரச் சான்றிதழ்கள் பெறப்படாமை போன்ற குறைபாடுகளும் கண்டறியப்பட்டன.
அதேநேரம், உணவு தயாரிக்கும் பணியாளர்கள் எவ்வித மருத்துவச் சான்றிதழும் இன்றியும், முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணியாமலும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளைக் கையாண்டுள்ளனர்.
அத்துடன், கழிவறைகளுக்கு அருகிலேயே உணவு தயாரிக்கும் சூழலும் காணப்பட்டுள்ளது.
இத்தகைய கடுமையான சுகாதார மீறல்கள் காரணமாக, குறித்த மூன்று உணவகங்களின் உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறாத வண்ணம் கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.