பதவிகளை வகிக்க தகைமைகள் இல்லை; பசிலுக்கு அழைப்பு விடுத்த நீதிமன்றம்!
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளை வகிக்க சட்டரீதியாக எந்தத் தகைமைகளும் இல்லையென தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்க மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா முன்னிலையில் அழைக்கப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, பிரதிவாதி பசில் ராஜபக்ஷவிடம் அறிவித்தல் கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார். எனினும், வழக்கு இன்று அழைக்கப்பட்டபோது அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ அல்லது அவரது சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்பி, வழக்கை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை வண. உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லசில் டி சில்வா ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.