சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம் ; யாழ்.மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வடக்கு மாகாண ஆளுநரால் தாம் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் ஞானபிரகாசம் கிஷோர் தாக்கல் செய்திருந்த மனுவை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி மறுப்புத் தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவித்தல்
கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி ஆளுநரால் வெளியிடப்பட்ட பதவி நீக்க வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, ஞானபிரகாசம் கிஷோர் கடந்த 4ஆம் திகதி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
சாவகச்சேரி நகர சபை தொடர்பில் விசாரணை நடத்திய தனிநபர் விசாரணை அதிகாரி க.அரியநாயகம், தனது அறிக்கையில் நகர சபையை முழுமையாகக் கலைக்குமாறு பரிந்துரைத்திருந்த பின்னணியில், தன்னை மாத்திரம் இலக்கு வைத்து பதவி நீக்கியது ஏன் என மனுதாரர் தனது மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நகராட்சி மன்றங்களின் சுயாதீன அதிகாரங்களில் ஆளுநர் தலையீடு செய்வது ஜனநாயகத்தை மீறும் செயல் என நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இருப்பினும், தரப்பு வாதங்களை நீண்டநேரம் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி க.சதீஸ்வரன், ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு நீதிமன்ற அறிவித்தலை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.