யாழில் கைதான இந்தியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (27) இரவு 9:45 மணியளவில் நெடுந்தீவு கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

சட்ட நடவடிக்கை
அதனைத் தொடர்ந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் பாரப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களிடம் திணைக்கள அதிகாரிகள் இன்று (28) விரிவான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர், முற்பகல் 11 மணியளவில் அவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சம்பவத்தை ஆராய்ந்த நீதவான், குறித்த 3 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.