விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த தடையுத்தரவு!
இலங்கை கிரிக்கெட்டின் யாப்புத் திருத்தம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றைய தினம் (12.09.2023) தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் மற்றும் செயலாளரின் மனுவை பரிசீலித்தப்பின்னரே இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மனு பரிசீலிக்கப்படும் வரை கிரிக்கெட்டின் யாப்பில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சமத் மொரேஸ் ஆகியோர் இணைந்து தடையுத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் யாப்பிற்கான விதிமுறைகளுக்கு அமைவாகவன்றி விளையாட்டுத்துறை அமைச்சர் தன்னிச்சையாக திருத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இது சட்டவிரோதமான செயல் என மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த மனு தொடர்பான ஆட்சேபனைகள் எதிர்வரும் (27.09.2023 ) திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.