கோட்டாபயவிற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறமுடியாமல் போனது இதுதான் காரணமா?
நாட்டை காப்பாற்றவென்று கூறி 40 வருடங்களிற்கு முன் நீங்கள் கொடுத்த நிறைவேற்று அதிகாரம் அதே மக்களின் மார்பில் நந்தசேன எனும் வடிவில் பாய்ந்த தருணம் இன்று.
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஐனாதிபதி ஒருவரிற்கு எதிராக ஒரு சிவில் வழக்கோ, குற்றவியல் வழக்கோ தொடரவோ, தொடுக்கப்படவோ முடியாது.
இதன் அடிப்படையில் தான் பல்வேறு வழக்குகளில் சிக்கிய தனது கடவுச்சீட்டை கூட நீதிமன்றத்தால் பறித்து வைக்கப்பட்ட ஒருவரை 69 இலட்சம் பேரும் சேர்ந்து ஐனாதிபதியாக்கி அத்தனை குற்றச்சாட்டுக்களில் இருந்தும் பிணை எடுத்து விட்டீர்கள்.
இன்று அந்த மக்களாகிய நீங்களே இவரை பிடிக்க வீதி வீதியாக வெறித்தனத்தோடு தேடியலைந்து கோட்டாபயவை கோட்டைவிட்ட இயலாமையில் அவரின் மாளிகைக்கு முன் நின்று வானத்தில் பறக்கும் விமானங்களை கோட்டா போறாரே என்று அண்ணாந்து பார்க்க வைத்திருக்கின்றது.
எந்த ஒரு இலங்கை குடிமகனும் ஏதேனும் குற்றத்திற்காக நீதிமன்றம் ஒன்றால் தேடப்படும் நபராக அறிவித்து, அவரின் கடவுச்சீட்டை முடக்கவும், அவர் நாட்டைவிட்டு எந்த ஒரு மார்க்கத்தாலும் தப்பிச்செல்வதை தடுக்கவும் சட்டத்தில் தாராளமாக இடம் உண்டு.
உச்ச நீதிமன்றத்தில் சாதாரணமாக ஒரு சட்டத்தரணி மூலம் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் மேற்குறித்த உத்தரவை இலகுவாக பெறமுடியும்.
ஆனால் நிறைவேற்று அதிகார ஐனாதிபதிக்கு உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. அவரினது ஆட்சிக்காலத்தில் அவரின் ஏதேனும் ஒரு செயலுக்காக நீதிமன்றை நாடமுடியாது.
இதனால் தான் தலைமறைவாக நாட்டில் 04 நாட்கள் இருந்த கோட்டாபயவிற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு எதையும் பெறமுடியாமல் போனது.
கோட்டாபய நாடுமுழுவதும் 4 நாளாக சுற்றிவிட்டு நள்ளிரவு தாண்டி தனது விருப்பப்படி விமானபடை விமானத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடவும் முடிந்தது.
இதை விட இந்த நிறைவேற்று அதிகாரத்திற்கு இன்னுமொரு அவமானகரமான பக்கமும் உண்டு. அதாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஐனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் செய்த செயல்களிற்காக அவர் பதவி விலகி சென்ற பின்னும் அவரை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்பது தான்.
இப்போது நாட்டை நாசமாக்கி மக்களையும் நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்த நந்தசேனவை கேள்வி கேட்ட இலங்கைக்குள் எவராலும் முடியாது. என முகநூலில் குறித்த கருத்துக்களை Nirojh Midhun என்பவர் பதிவிட்டுள்ளார்.