சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; இருவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
பெல்லன்வில நடைபாதை அருகே உணவக உரிமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யும் பொருட்டு மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், மற்றொருவர் பகமூண பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடுப்புக் காவல்
கடந்த 25ஆம் திகதி, பெல்லன்வில பகுதியிலுள்ள உணவகத்தின் முன்பாக நீல நிற முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட அவசர வீதித் தடைச் சோதனையின் போது, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களை நவகமுவ பொலிஸார் கைதுசெய்தனர்.
பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவு பெறப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நேற்று (29) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.