ஜீப் வாகனத்துடன் சிக்கிய தம்பதியர் ; விசாரணையில் அடுத்தடுத்து வெளிவந்த அதிர்ச்சி
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் போலி அடையாள அட்டையுடன் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருடன் பயணித்த பெண்ணிடமிருந்து 05 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை - கொன்னொருவ பகுதியில், நேற்று (11) ஹம்பாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது சந்தேகத்திற்கிடமான ஜீப் ரக வாகனமொன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

போதைப்பொருள்
குறித்த வாகனத்தைச் செலுத்திய நபரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. அவர் பொலிஸாரிடம் சமர்ப்பித்த அடையாள அட்டை போலியானது என விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சந்தேகநபரிடமிருந்து 21 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவருடன் பயணித்த பெண்ணிடமிருந்து 05 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் ஜீப் ரக வாகனத்துடன் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தணமல்வில மற்றும் வீரவில பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 33 வயதுடைய தம்பதியினர் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய மேலதிக விசாரணையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு சூரியவெவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
அத்துடன், 2019 ஆம் ஆண்டு, தணமல்வில பொலிஸ் பிரிவில் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச் செயல்களின் பின்னர் இவர் போலி அடையாள அட்டையைத் தயாரித்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.
அத்துடன், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொடர்பைப் பேணி, தென் மாகாணத்தில் போதைப்பொருள்விநியோகத்தில் ஈடுபட்டு வந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.