இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு கைகொடுக்கும் நாடுகள்!
இலங்கையின் வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக உறுதி அளித்துள்ளனர்.
இன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார்.
அத்துடன் சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லோர்ட் நெஸ்பி (Michael Naseby) தெரிவித்தார்.
அதேசமயம் தென் கொரியாவில் இலங்கைக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில், தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கோ யூன் – சோல் (Koo Yun-cheol) ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
அதோடு தென் கொரிய தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதாகவும், கொரியாவில் இருந்து இலங்கைக்கு அதிநவீன தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தவும் தன்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குதாக திரு.கோ யூன்-சோல் (Koo Yun-cheol) தெரிவித்தார்.
இதன்போது தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு கிடைக்கும் அபிவிருத்தி உதவிகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையில் உள்ள மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்கு உள்ள வாய்ப்பையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இந்த சந்திப்பில் கொரிய தூதுவர் ஜியோன்ங் வூன்ஜின்ங் (Jeong Woonjing) மற்றும் கொரியாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ரியோ டே-யோன்ங் (Ryoo Dae-Young) ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
விசேட சுற்றுலா வலயங்களை அமைப்பதன் மூலம் எகிப்திய சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை ஈர்க்க முடியும் என இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லே (Maged Mosleh) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான 65 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூர்ந்த தூதுவர், சர்வதேச மாநாடுகளில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் இந்தன்போது ஜனாதிபதி கோட்டாபயவுக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது.