மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம்!
இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பு ஒன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா எனும் இப்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
அப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவரை கண்டுபிடிப்பதற்கு பல குழுக்கள் அனுப்பப்பட்டன.
வயிறு உப்பிய மலைப்பாம்பு
இதனையடுத்து மறுநாள், வயிறு உப்பிய நிலையில் மலைப்பாம்பு ஒன்றை கிராமவாசிகள் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் பாம்மை கொலை செய்து அதன் உடலை வெட்டி பார்த்தபோது அப்பெண்ணின் உடல் அப்பாம்புக்குள் இருந்ததாக கூறப்படுகின்றது.
காணாமல்போனபெண் பயன்படுத்திய ஆடைகள், கருவிகளை அவரின் கணவர் கண்டதையடுத்து அவரை தேடுவதற்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேற்படி பாம்பு 5 மீற்றர் (16 அடி) நீளமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மலைப்பாம்பினால் மனிதர்கள் கொல்லப்பட்டு விழுங்கப்படுவது இந்தோனேஷியாவில் இது முதல் தடவையல்ல. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் அங்கு இத்தகைய இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.