உலக நாடுகளையே நடுங்கவைத்த கிம்முக்கு கொரோனா கொடுத்த அதிர்ச்சி!
வெளித் தொடர்புகள் ஏதும் இன்றித் மூடப்பட்டிருந்த வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றானது, உலக நாடுகளையே நடுங்கவைத்த கிம்முக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
உலகமே கொரோனா தொற்றினால் தவித்தபோது, எந்தக்கவலையும் இல்லாமல் வடகொரியா, அடுத்தடுத்துப் பல ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்திக் கொண்டி ருந்த சமயத்தில் நாட்டுக்குள் பல லட்சம் பேர் காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
வடகொரிய அரச தொலைக்காட்சி வெள்ளி யன்று வெளியிட்ட தகவலில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஆறு பேர்உயிரிழந்ததாகவும் அவர்களில் ஒருவர் ஒமிக்ரோன் திரிபுத் தொற்றுக்குள்ளாதாகவும் அறிவித்தது.
கோவிட் வைரஸின் எதிர்பாராத இந்தப் பரவல் நாட்டுக்குப் “பேரனர்த்தம்” என அதிபர் கிம் ஜொங் உன் (Kim Jong-un) அவசர கூட்டம் ஒன்றுக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வட கொரியாவில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் பெரும்தொற்றுநோய்ப் பரவலைத் தாக்குப் பிடிக்கமாட்டாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் வைரஸ் பரவித் தாண்டவமாடிய கடந்த இரண்டு ஆண்டுகாலம் எல்லைகளை இறுக்கி மூடிய வடகொரியா நாட்டில் எவருமே தொற்றுக்கு இலக்காகவில்லை என்று கூறிவந்தது. அதோடு சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை அந்நாடு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது.
இவ்வாறான நிலையில் தற்சமயம் சுமார் ஐந்து லட்சம் பேர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். சில காலத்துக்கு முன்னரே அங்கு வைரஸ் புகுந்து விட்டது என்பதையே தற்போதைய நிலைவரம் காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை கொரோனா தாண்டவமாடும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் வடகொரியாவுக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார் என தென் கொரியா அறிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.