வடக்கில் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்
வடமாகாணத்தில் கொரோனா தொற்றினால் சுமார் 753 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
வடமாகாணத்தில் இதுவரையில் 753 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேரும், செப்டம்பர் மாதத்தில் 334 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கில் இதுவரையில் 36 ஆயிரத்து 356 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஓகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 634 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் 9 ஆயிரத்து 186 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடமாகாணத்தில் ஓகஸ்ட் 15 தொடக்கம் செப்டெம்பர் 15 வரையான காலப் பகுதியிலேயே அதிக இறப்புக்களும் தொற்றுக்களும் நிகழ்ந்துள்ளதாகவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
இதனால் வடக்கு மாகாணத்தில் சடலங்களை எரியூட்டுவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டதால் 23 சடலங்கள் வெளி மாகாணங்களுக்கு அனுப்பி எரியூட்டப்பட்டதாக தெரிவித்த அவர், தற்போது வடக்கிலேயே சடலங்கள் எரியூட்டப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.