எரிக்க அனுமதி கிடைக்கவில்லை; யாழில் பல மணிநேரம் நோயாளர் விடுதியில் வைக்கப்பட்டிருந்த கொரோனா சடலங்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சோி வைத்தியசாலை நோயாளர் விடுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இருவரின் சடலங்கள் அங்கு பல மணிநேரம் வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதியிலிருந்த மற்றய நோயாளிகள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகின்றது.
கொரோனாத் தொற்றுக்குள்ளான இருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்திருந்தனர்.
எனினும் பிற்பகல் 3 மணிவரையில் அவர்களின் சடலங்கள் இரண்டும் கட்டிலிலேயே காணப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக சம்பவத்தால் ஏனைய கட்டிலில்களில் இருந்த நோயாளர்கள் உள ரீதியாக பலத்த சங்கடங்களை எதிர்கொண்டதாக தெரியவருகிறது.
இந்நிலையில் , யாழ்ப்பாணத்தில் சடலம் எரிப்பதற்கான அனுமதி பிற்பகல் வரையில் கிடைக்கவில்லை என்பதாலும் பிரேத அறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமையாலுமே சடலத்தை அங்கிருந்து அகற்றவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.
அதன் பின்னர் சுமார் 3 மணியளவில் ஒரு சடலம் எரியூட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் 4 மணிக்கு பின்னரே மற்றைய சடலம் நோயாளர் விடுதியிலிருந்து எடுக்கப்பட்டு பிரேத அறைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.