விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கிலக்கான குற்றவாளி
கொழும்பு - தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ ஒருவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. தலங்கம பிரதேசத்தில் கடந்த (25.08.2023) அன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்படவிருந்தார்.
விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபர் T-81 ரக தானியங்கி ஆயுதத்தால் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி சுட்டுள்ளார்.
அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, கைக்குண்டு, மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்க தகடு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரான 'கோட்டா சுபுன்' தலங்கம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
தலங்கம பிரதேசத்தில் கடந்த (25.08.2023)ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.இறந்தவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்.