கவுன் அணிந்து வினாத்தாள் திருத்த சென்ற ஆசிரியைகளால் சர்ச்சை!
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகள், சேலைக்குப் பதிலாக கவுன் அணிந்து வந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், நாளை (18) முதல் மீண்டும் தங்கள் பணிகளில் ஈடுபடுவார்கள் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
பதற்றத்தை தணிக்க பொலிஸார் அழைப்பு
பன்னிபிட்டி தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு மையம், பாடசாலை அதிபர் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியைகளிடையே ஆடை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியைகள் நேற்று (16) சேலைக்குப் பதிலாக கவுன் அணிந்து வந்ததால், பாடசாலையின் பெண் அதிபர் குறித்த ஆசிரியைகளுக்குப் பரீட்சை மதிப்பீட்டு மையத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் மதிப்பீட்டு மையம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல்படுவதால், அவர்களின் ஆடைக் கட்டுப்பாடு குறித்து அதிபருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று ஆசிரியைகள் வாதிட்டனர்.
இருப்பினும், பாடசாலை வளாகத்திற்குள் ஒரு குறிப்பிட்ட அளவிலான ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து பார்வையாளர்களும் பாடசாலையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பெண் அதிபர் கூறினார்.
இது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து பதற்ற நிலைமையைத் தணிக்க பொலிஸார் அழைக்கப்பட்டனர், ஆனால் ஒரு உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை.
இதன் விளைவாக, மதிப்பீட்டு மையத்தைத் தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் ஜெயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், விடைத்தாள் திருத்தும் வளாகத்தில் ஒரு மதிப்பீட்டு மையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பரீட்சை ஆணையாளர் , குறித்த ஆசிரியைகள் குழு மீண்டும் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.