வவுனியாவில் காளி அம்மன் தேவஸ்தானத்திற்கு முன் மனித சிலைகள்? வெடித்தது சர்ச்சை
வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை வைத்தமையினையடுத்து அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
தாஸ்கோட்டம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின் வளாகத்தில் மரக்காரம்பளை வீதியினை பார்த்த வண்ணம் வீதியின் அருகே காளியம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காளியம்மன் சிலைக்கு எதிர்த்திசையில் வீதியின் மறுபக்கத்தில் பல வருடங்களாக பேரூந்து தரிப்பிடம் அமைந்திருந்தது. தற்போது குறித்த பேரூந்து தரிப்பிடம் அதன் உரிமையாளரினால் தற்போது மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அவரின் அமரத்துவமடைந்த பெற்றோரின் திருவுருவ படத்தினை அகற்றி அவர்களின் ஞாபகாரத்த சிலையினை வைத்துள்ளார்.
காளியம்மன் சிலைக்கு முன்பாக எதிர்த்திசையில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தின் மேற்பகுதியில் அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகார்த்த சிலை வைத்தமை இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் செயற்பாடு எனவும், அத்துடன் குறித்த இந்து தெய்வம் கீழே இருப்பதுடன் அமரத்துவம் அடைந்தவரின் சிலை மேலே இருப்பது வேதனையளிக்கும் விடயமெனவும் இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேசசபையிடம் முறையிட்டு்ம் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி இளைஞர்கள் விசனம் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜாவிடம் கேட்ட போது, குறித்த விடயம் தொடர்பில் எமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இரு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி தீர்வினை வழங்கியிருந்தோம்.
எனினும் தற்போது பிரதேச சபையின் அனுமதியின்றி அமரத்தும் அடைந்தவர்களின் சிலை வைத்தமை மற்றும் சிசீரீவி பெருத்தியுள்ளமை என தற்போது மேலும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
எமது அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் செயலாளரை வினவிய போது, குறித்த செயற்பாடு எமது இந்து சமயத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கடவுளுக்கு மேலே அமரத்துவம் அடைந்தவர்களின் சிலை வைப்பது தவறு. இவ்விடயம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரிடமும் தலைவரிடமும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் குறித்த பேரூந்து தரிப்பிடத்தின் உரிமையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார்.
அமரத்துவம் அடைந்தவர்களின் ஞாபகாரத்த சிலையுடன் புனரமைப்பு செய்யப்பட்ட பேரூந்து தரிப்பிடமானது கடந்த (18.01.2022) அன்று திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
