யாழில் றஜீவன் MPயின் ஓய்வூதிய விண்ணப்பம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் அதிபர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு முறையற்ற வழியில் - ஓய்வூதியத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இது இப்போது அவரது நாடாளுமன்றப் பதவிக்கு ஆப்பாகக் கூடிய சாத்தியங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய ஜெ.றஜீவன் அதிபர் சேவை தரம் 11ஐச் சேர்ந்தவர்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிற்கு நேரடியாக அரசியலில் ஈடுபட முடியாது, என்றபோதும் தமது பதவியில் இருந்து விலகித் தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியும்.
அல்லது 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்டவர்கள் வேட்புமனுத் தாக்கலுக்கு குறைந்தது 10 தினங்களிற்கு முன்பு தங்களைப் பணிக்கு நியமித்த நியமன அதிகாரிக்கு விண்ணப்பித்து, 7 தினங்களிற்கு முன்னர் ஒப்புதல் பெற்றால், ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என நிர்வாக நடைமுறையின் ×××11 (உரோமன் இலக்க) சுற்று நிரூபம் தெரிவிக்கின்றது.
அதாவது, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி போன்ற அதிபர் பதவியில் இருப்பவர்கள் பதவியை விட்டுத் தாமாக விலகி - அதாவது பதவியைத் துறந்து - தேர்தலில் குதிக்கலாம். அல்லது முறையாக - சட்ட, ஒழுங்கு விதிகளில் உள்ளபடி - ஓய்வுக்கு விண்ணப்பித்து, நேர் சீரராக அனுமதி பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடலாம்.
அந்த இரண்டையும் அவர் செய்தாரா என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினை. அவர் தேர்தலில் இறங்க முன்னர் தாமாகப் பதவியையும் துறக்கவுமில்லை, முறையாக - ஒழுங்கு விதிப்படி ஓய்வு அனுமதி பெறவுமில்லை என்று இப்போது தெரிய வந்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வேட்பு மனுத் தாக்கல் ஒக்டோபர் 4 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 11 ஆம் திகதி நிறைவடைந்தது. ஜெ.றஜீவன் ஒக்டோபர் 3 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்துள்ளார் என யாழ்ப்பாணம் வலயக் கல்வித் திணைக்களம் 2025-01-04 ஆம் திகதி அன்று, அதாவது 3 மாதங்களின் பின்னர் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அறிக்கையிட்டுள்ளது.
ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவனின் ஓய்வூதியத்துக்கான பரிந்துரையை வலயக் கல்வி அலுவலகம் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பியதற்கமைய மாகாணக் கல்வித் திணைக்களம் தமது சிபார்சுடன் 2025-01-24 அன்று 20 தினங்களில் மாகாண கல்வி அமைச்சிற்கு அதனை அனுப்பி வைத்துள்ளது.
மாகாணக் கல்வித் திணைக்களத்தால் மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பிய கடிதத்தில் 2024-11-14 முதல் ஓய்விற்கு விண்ணப்பித்துள்ளார் என முரணான திகதியிடப்பட்டுள்ளபோதும் 2024-10-03 இல் இருந்து ஓய்வுபெற சிபார்சு செய்யப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் மாகாண கல்வி அமைச்சிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண கல்வித் திணைக்களத்தின் சிபார்சிற்கு ஏற்ப 2025-04-04 இல் இரு மாத காலங்களின் பின்னர் மாகாணக் கல்வி அமைச்சானது உதவிச் செயலாளர், அதிபர் கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய, பத்திரமுல்லைக்கு ஓய்வூதியத்திற்கு தமது சிபார்சுடன் சகல ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இரு தாதியர்கள் விடுமுறை எடுக்காது தேர்தல் வேட்புமனுவில் ஒப்பமிட்டமைக்காக பணியில் இருந்து இன்றுவரை இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முன்பு இடம்பெற்ற தேர்தல்களில் முறையாக அனுமதி பெறாமல் போட்டியிட்டமைக்காக கலாசார உத்தியோகத்தர் ஒருவர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உள்பட ஐவர் பணியீல் இருந்து இன்றுவரை இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இதே கட்சியில் போட்டியிட்ட ஆசிரியர் வெற்றியீட்டியதன் பெயரில் பணி விலகல் கடிதம் பெறப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான ஜெ.றஜீவன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பு மனு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் 2024-10-10 அன்று கையளிக்கப்பட்டுள்ளது.
சமாதான நீதவான் அந்த வேட்பு மனுவை 2024-10-09 இல் உறுதிப்படுத்தியுள்ளார். றஜீவன் அரசியல் உரிமை அற்ற ஓர் அதிகாரியான அதிபராக பணியாற்றியமையால் குறைந்தது வேட்பு மனுக் கையளிப்பிற்கு 10 தினங்களிற்கு முன்னர் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் சட்டம் மற்றும் சுற்று நிரூபங்கள் கூறுகின்றது.
அதிபர்களிற்கான நியமன அதிகாரி மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் என ஓர் தர்க்கமும் முன் வைக்கப்பட்டாலும், அதற்கும் அப்பால் முன்னாள் அதிபரான ஜெ.றஜீவன் நல்லூர் கோட்ட அதிகாரிக்கு 2024-10-03 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் வழங்கியதன் பெயரில் ஏழு தினங்கள் மட்டுமே கால அவகாசம் காணப்படுகின்றது.
உரிய பத்துத் தினங்கள் இல்லை. அத்துடன் ஓய்வுக்கான முறையான அனுமதியை குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னராவது அவர் பெற்றிருக்க வேண்டும்.
இன்னும் கூட அதற்கான அனுமதி அவருக்குக் கிடைக்கவில்லை. 2024-10-03 ஆம் திகதியிடப்பட்ட ஜெ.ரஜீவனின் ஓய்வு விண்ணப்பக் கடிதத்திலும் நல்லூர் கோட்டத்தினர் தமது ஆர்வக் கோளாறு காரணமாக - 2024 ஒக்ரோபர் 03 ஆம் திகதி என்பதற்குப் பதிலாக - 2024 செப்ரெம்பர் 03 ஆம் திகதி என்றே திகதி முத்திரையைப் பொறித்து விட்டமை மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அதிபர் சேவையின் நியமன அதிகாரியான மத்திய கல்வி அமைச்சின் செயலாளரின் முகவரியும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்ற தர்க்கமும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவை அனைத்திற்கும் அப்பால் யாழ்ப்பாணம் வலயம், வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சு என்பன செம்மணி வீதியில் ஒரே வளவிற்குள் உள்ளபோதும் இவரது கோவை மத்திய கல்வி அமைச்சிற்கு அனுப்புவதற்கு 6 மாதங்கள் எடுத்துள்ளமை ஏன் என்ற விடயம் திணைக்களம் சார்பிலும் நியாயமான கேள்வி எழுவதற்கு காரணமாக அமைகின்றது.
தவிரவும், இந்த விடயங்கள் நோண்டப்படுகின்ற போது பாடசாலைக்கு அவர் கடைசியாக பணிக்கு சமுகமளித்த தினம் பரிசீலனைக்கு உள்ளாகும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும் எனவும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.