பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு ; தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரிக்கை
கட்டுமானப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்புகள் கட்டுமானத்துறையை முடக்கத்தை நோக்கித் தள்ளக்கூடும் என்று தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தேசிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்புன் அபேசேகர, தெரிவிக்கையில்,

நிதிச் சுமை
கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் சிமெந்து பைக்கெட் ஒன்றின் விலை சுமார் 300 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னர் சுமார் 1,900 ரூபாவுக்கு விற்கப்பட்ட சிமெந்து பைக்கெட் ஒன்று தற்போது 2,250 ரூபாவுக்கு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது.
சில பைக்கெட்டுக்களின் உச்சபட்ச சில்லறை விலை 2,400 ரூபாவை எட்டியுள்ளது. இவ்வாறு உற்பத்தியாளர்கள் படிப்படியாக விலைகளை அதிகரித்துச் செல்வதால் நுகர்வோர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மீது மேலதிக நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்புகளைத் தேடி ருமேனியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதால், கட்டுமானத்துறை ஏற்கனவே தகுதியான தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையுடன் போராடி வருகிறது.
அலுமினியம் மற்றும் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தொடர்ச்சியான விலை அதிகரிப்புகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்கிறது. உள்ளுர் கட்டுமானத்துறையை நம்பி வாழும் சுமார் 1.5மில்லியன் மக்கள் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடும் நிலைமை காணப்படுகிறது.
நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைத் தடுப்பதற்கும், கட்டுமானத்துறையைப் பாதுகாப்பதற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் தலையிட்டு, விலைக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதுடன், விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றார்.