மசாஜ் நிலைய பணிப் பெண்களை அச்சுறுத்தி கான்ஸ்டபிள் செய்த வேலை; அதிரடியாக கைது !
மசாஜ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
எலயாபத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,
சுற்றிவளைப்புக்கு வந்ததாக மிரட்டல்
சந்தேக நபர் கடந்த 14 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் பெண்ணொருவருடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் மசாஜ் நிலையம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.
அங்கிருந்த பணிப்பெண்களிடம் தான் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக வந்ததாகவும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு 3 ஆயிரம் ரூபா பணம் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து பணிப்பெண்கள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 2 ஆயிரம் ரூபா பணத்தை மாத்திரம் கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்ற கான்ஸ்டபிள் மசாஜ் நிலையத்திலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மறுநாள் இரவு மற்றுமொரு நபருடன் இணைந்து குறித்த மசாஸ் நிலையத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
இதன்போது, தன்னுடன் வந்த நபருக்கு இலவசமாகச் சேவையை வழங்க வேண்டும் என மசாஜ் நிலைய பணிப்பெண்களிடம் பொலிஸ் கான்ஸ்டபிள் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் மசாஜ் நிலைய பணிப்பெண்ணின் கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.