59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உட்பட 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது.

ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது.
முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில், அதிமுகவின் 25 எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்க, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
தவெக அரசுக்கு முதன்முதலில் ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களான செ.ராஜேஷ் குமார், பெ.விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சரவையில் இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரவையில் விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். விசிக, ஐயூஎம்எல் தரப்பும் இதற்கு ஒப்புதல் தெரிவித்த நிலையில் 23 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.