அரச அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல்
கந்தளாய் சீனி நிறுவனத்திற்குச் சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய கால பயிர்ச் செய்கைக்கு வழங்குவதற்காக நில அலுவலக அதிகாரிகள் நேற்று (21) நடவடிக்கை எடுத்த போது விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
20 ஆண்டுகளாக தாங்கள் பயிரிட்ட நிலத்தை மற்றொரு விவசாயிகளுக்குக் கொடுப்பதாக குறித்த தரப்பினர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த பதற்றம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு விவசாயம், நிலம், கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கந்தளாய் சீனி நிறுவனத்திற்குச் சொந்தமான 11,000 ஏக்கர் நிலத்தை குறுகிய கால பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, ஐந்து ஏக்கருக்கு மிகையாகாமல் நிலங்களை வழங்க முடிவு செய்யப்பட்டதுடன், இதற்காக முறையான வழிமுறையை உருவாக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
கந்தளாய் சீனி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தை விவசாயிகள் சுமார் 20 ஆண்டுகளாக நெல், தினை மற்றும் சோளம் உள்ளிட்டவற்றை பயிரிட பயன்படுத்தி வந்தனர்.
இத்தகைய சூழலில், கந்தளாய் நில அலுவலக அதிகாரிகள், விண்ணப்பங்கள் மூலம் புதிய விவசாயிகள் குழுவிற்கு சம்பந்தப்பட்ட நிலங்களை விநியோகிக்க முடிவு செய்திருந்தனர்.
புதிய முறையின் கீழ், ஒவ்வொரு விவசாயிக்கும் சாகுபடிக்காக மூன்று ஏக்கர் ஒதுக்கப்படுவதுடன், குறித்த நிலங்களைப் பிரிக்கும் நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இதை அறிந்ததும், அங்கு ஏற்கனவே பயிரிட்ட விவசாயிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்த நிலையில், நில அலுவலக அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
பின்னர், அக்போபுரா பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு பிரவேசித்து நிலைமைய கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், தாக்குதலில் ஈடுபட்ட 03 பேரை கைது செய்தனர்.