லொறியில் சிக்கிய 24 வயதுடைய இளைஞருக்கு நடந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை
நாவலப்பிட்டி நகரில் இன்று இடம்பெற்ற விபத்தினால் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாவலப்பிட்டி - கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையம் ஒன்றுக்கு அரிசி மூடைகளை ஏற்றி வந்த கொள்கலன் லொறியில், அதன் நடத்துநர் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
பொலன்னறுவையிலிருந்து வந்த குறித்த லொறியை, பின்னோக்கி எடுப்பதற்காகச் சாரதிக்குச் சமிக்ஞை காட்டிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது லொறியின் பின் சக்கரம் நடத்துநரின் கழுத்துப் பகுதியில் ஏறியதில், அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. அவர் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த நாவலப்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.