ஊழியர்களை பணிக்கு அழைத்தமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்
நாட்டில் கொவிட் -19 தொற்று சூழக்கு மத்தியில் அனைத்து பொது ஊழியர்களையும் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளிக்கப்படவுள்ளது.
மேற்படி தீர்மானத்தினால் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உட்பட பல தரப்பினர் ஆபத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியே இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று புகார் செய்யப்படவுள்ளது.
இதன்மூலம் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மேம்பாட்டு அதிகாரிகள் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், ஊழியர்களை வரவழைக்கும் சுழற்சி அடிப்படையை இரத்து செய்து , அனைத்து அரச ஊழியர்களையும் வேலைக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கைக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், தொழிற்சங்கம் புகார் அளிக்கும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த சுற்றறிக்கை பல்வேறு தரப்பினர்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளையும் நீக்கியுள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்பினர் கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.