அரசாங்க வாகனத்துடன் ஓட்டம்பிடித்த சாரதி!
கொழும்பு காகிதக் கூட்டுத்தாபனத்தின் (Paper Corporation) தலைவரின் சாரதி, வாகனத்துடன் காணாமல் போயுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
கொழும்பு 06, ஸ்டாஃபோர்ட் வீதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலிருந்து, தலைமை அதிகாரியை அலுவலகத்திற்கு அழைத்து வருவதற்காகக் கடுவெலயில் உள்ள அவரது வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே சாரதி காணாமல் போயுள்ளார்.

பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணை
வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு வராததால் சாரதியைத் தொடர்புகொண்டு கேட்டபோது, வாகனத்தில் எரிபொருள் கசிவு இருப்பதாகச் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடுவெல பகுதியில் உள்ள ஒரு பழுதுபார்க்கும் நிலையத்திற்குச் சென்று காண்பிக்குமாறு தலைவர் அறிவுறுத்தியுள்ளார். சாரதியும் அங்கு சென்று காண்பித்த நிலையில் வாகனத்தில் எந்தப் கோளாறும் இல்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த (21) ஆம் திகதி மாலை 4.00 மணி வரையிலும் சாரதி அலுவலகம் திரும்பாததால், அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது கைபேசி அணைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகக் காகிதக் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளர் சமன் பிரியங்கர பெர்னாண்டோ வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல்போன சாரதி ராகம, கெந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.
இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்த ஓட்டுநர், நேற்று அந்த அதிகாரப்பூர்வ வாகனத்தை மட்டும் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், காணாமல் போன சாரதியின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் , சிசிடிவி காட்சிகள் மற்றும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.