கொழும்பு நீர்விநியோகம் தொடர்பில் வெளியான அறிவித்தல்: பின்னணியில் மாபியா குழு
கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளுக்கான குடிநீர் தொடர்பான போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீரை அருந்தும் மக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை. இது முற்றிலும் பொய்யானவை என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மறுப்புத் தெரிவித்துள்ளது.
முறையான சுத்திகரிப்புப் பணிகளின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும் சபை விளக்கமளித்துள்ளது.
நுண்ணுயிரியல் சோதனை
சுத்திகரிப்புக்குப் பின்னர் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புக்கு வழங்கப்படும் தண்ணீர், தொடர்ந்து ஆய்வக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றது.
இதற்கமைவான, பரிசோதனை முடிவுகளின்படி, நுண்ணுயிரியல் சோதனைகள் மற்றும் அனைத்து இரசாயன சோதனைகளும் தண்ணீரில் மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கைத் தர நிலையின் படி, தண்ணீரில் எந்த விதமான நோய்க் கிருமிகளோ அல்லது தொற்றுகளோ இல்லை என்பதை உண்மைப்படுத்தி உறுதியளிக்கிறோம்.
மக்களிடம் கோரிக்கை
எனவே, இது தொடர்பில் மக்கள் வீண் அச்சத்தைத் தவிர்ந்து கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் போத்தல்களின் விற்பனை அதிகரிப்பதற்காக சில மாபியா குழுக்களினால் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.