கொழும்பு மாணவி உயிர்மாய்ப்பு ; விசாரணையை விரைப்படுத்துமாறு பிரதமர் ஹரிணி ஆலோசனை
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் சம்பவம் தொடர்பான விசாரணையை முறைப்படுத்தி, விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணை குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் பொலிஸ் குழுவிற்கும் இடையே பிரதமர் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையிலும் மேலதிக வகுப்பிலும் நடந்த சம்பவங்கள் குறித்து பாரபட்சமற்ற, சரியான மற்றும் விரைவான விசாரணைகளை நடத்துமாறு பிரதமர் பொலிஸ் விசாரணை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் பதிவாகியபோது எடுக்கப்பட்ட செயல்முறை திறமையானதா? என்பது குறித்து கல்வி அமைச்சின் ஊடாக உள்ளக விசாரணையை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் தலையிட வேண்டிய அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளைகளுக்கு நேர்மறையான பதில் இல்லை என்றும் கவனிக்கப்பட்டதால்,
அந்த பொறிமுறையை கண்காணித்து அதை முறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, குழந்தைகள் நல வைத்திய நிபுணர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை பிரதமர் நியமித்தார்.