கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலக பங்கு சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
இந்நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், இன்று (07) காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.
உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம்
வர்த்தகம் இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சூட்டெண் 639.01 புள்ளிகள் குறைந்து 14,734.34 புள்ளிகளாகவும், S&P SL20 விலைச் சூட்டெண் 240.45 புள்ளிகள் குறைந்து 4,292.90 புள்ளிகளாகவும் பதவாகியிருந்தன.
இது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் மற்றும் S&P SL20 சுட்டெண்ணுடன் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது முறையே 5.30% மற்றும் 4.16% சரிவைக் குறிக்கிறது.
இதேவேளை, வாரத்தின் முதல் நாளான இன்று உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 1987இற்கு பின் நிகழும் மிகப்பெறிய பங்குச்சந்தை சரிவாக அமையும். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சிங்கப்பூரின் பங்குகள் இன்று சந்தை தொடக்கத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் உயர்வை காட்டியது.
அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.
அதேவேளை ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் (7.37 சதவீதம்) சரிந்து 3,544.02 ஆக உள்ளது.