கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; மேலும் இருவர் கைது
கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், அவர் கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபரான பெண்ணுக்கு 32 வயது எனவும், அவர் மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் இவர்களைத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 7ஆம் திகதி கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16ஆம் ஒழுங்கைப் பிரதேசத்தில் இந்த மனிதக் கொலை இடம்பெற்றது.
விசாரணைகளின்போது, கொல்லப்பட்டவர் குற்றக் கும்பல் உறுப்பினரான 'பூகுடு கண்ணா' என்ற பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.