பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; கொழும்பு–ஜகார்த்தா விமான சேவைகள் ரத்து!
இந்தோனேசியாவின் Anak Krakatau எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா–கொழும்பு) ஆகிய விமான சேவைகள் இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இலங்கையை நோக்கிய மேற்கு வான்வழிப் பாதையிலான விமானப் போக்குவரத்தையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்ப்பதற்காக, சிட்னி மற்றும் மெல்போர்னிலிருந்து வந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் நேற்று இரவு மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா இடையே சேவைகளை வழங்கும் மத்திய கிழக்கு நாடுகளின் பல விமான நிறுவனங்களும் தங்கள் பயணப் பாதைகளை மாற்றிக்கொண்டன.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக இந்தோனேசியாவின் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.