சர்வதேச வழக்கறிஞர் யஸ்மிக் சூகாவுக்கு கொழும்பு நீதிமன்றம் அழைப்பாணை
மனித உரிமை வழக்கறிஞர் யஸ்மின் சூகா (Yasmin Sooka) மற்றும் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த மற்றைய இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலாய் (Suresh Sallay) தாக்கல் செய்த சிவில் அவதூறு வழக்கில், 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இவர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நீதிமன்றில் பிரதிவாதிகள் ஆஜராகவில்லை என மேலதிக மாவட்ட நீதிபதி ஏ.டி.சத்துரிக்கா டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரும் ஆர்வலருமான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) யஸ்மின் சூகா, இணையத்தள நிர்வாகிகளிற்கு எதிராக, அரச புலனாய்வுப் பிரிவின் பிரதான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, ரூ.1 பில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேவேளை அவருக்கு எதிராக தீங்கிழைக்கும், அவதூறான அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் ஒருவரை, வாதியால் மேடையேற்றப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் பொய்யான சாட்சியத்தை அளிக்கும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த வைத்தியரை காவலில் வைக்க வற்புறுத்தியதாகவும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்து தவறான சாட்சியம் அளிக்க மிரட்டியதாகவும் அந்த அறிக்கைகள் குற்றம் சாட்டியுள்ளன.
மேலும், சுரேஷ் சாலேயின் மனுவில், 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட தமக்கு பல பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புகழ்பூத்த தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், மேஜர் ஜெனரலாக அரச உளவுத்துறை இயக்குநராக பணியாற்றி வருவதாகவும், கொரோனா ஒழிப்பு பணிக்குழுவில் உறுப்பினராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் 1ஆம் திகதி அன்று, முதலாம் பிரதிவாதியான திருமதி சூகா, தன்னைக் குறிப்பிட்டு, 2வது பிரதிவாதியால் சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை அவர் இயக்கும் இணையத்தளத்தில் வெளியிட்டதாக குறிப்பட்டுள்ளார்.
இணையத்தளத்தில் 2வது மற்றும் 3வது பிரதிவாதிகள் போலியான, தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு காரணமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.
இதன்படி தனக்கு நஷ்டம் மற்றும் நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு பில்லியன் ரூபா அல்லது அதற்கு சமமான அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.