மர்ம பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 7 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
தென் கடலில் கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட 200 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 7 பேரையும் எதிர்வரும் 2023 ஜனவரி 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (22-12-2022) உத்தரவிட்டது.
கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இந்த 7 பேரும், 7 நாள் தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான், ஒவ்வொரு சந்தேகநபர்களுக்கும் எதிரான சாட்சியங்களின் அடுத்த தவணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.