கொழும்பு மாநகர சபை முறைகேடு ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் மோசடி
கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடையவிருந்த நிலையில், இறுதி அறிக்கையைத் தயாரித்து சமர்ப்பிப்பதற்காக அதன் காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல், மோசடி, குற்றவியல் நம்பிக்கைத் துரோகம் மற்றும் சொத்துக்களின் தவறான பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க தலைமையிலான குழுவில் கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.