கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கானத் தகவல்
கொழும்பு – பதுளை வீதியில் ஹாலிஎல்ல – உடுவர பிரதேசத்தில் தொடர்ந்து மண்சரிவு அனர்த்தம் நிலவி வருவதால் அப்பகுதியில் பாரவூர்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் தொடர்ந்தும் அடை மழை பெய்து வருவதால் கொழும்பு - பதுளை உடுவர ஹாலிஎல பிரதேசத்தில் மண்சரிவும் வீதி தாழிறக்கமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவ்வீதியில் செல்லும் கனரக வாகனங்களை உடனடியாக தடை செய்யுமாறும் நேற்று பதுளை கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான மேஜர் சுதர்சன தெனிபிட்டிய தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாற்று வீதி பிரயோகம்
இதனால் பதுளை, பண்டாரவளை, கொழும்பு போன்ற இடங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் யாவும் ஹாலிஎல அட்டம்பட்டி வீதியை பயன்படுத்துமாறு பதுளை போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை பணித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க அவசர தேவைகளுக்கென செல்லும் வாகனங்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இவ்வீதியை பயன்படுத்த முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.