ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்த முதலமைச்சர் விஜய் மற்றும் சீமான்; சட்டத்தரணி சுகாஸ் கோரிக்கை
ஈழத் தமிழர்களின் சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து வன்மத்தை தெரிவிப்பது தவிர்க்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது, மாண்புமிகு விஜய் அவர்களா? அல்லது மரியாதைக்குரிய சீமான் அவர்களா? இன்று ஈழத்தமிழர்களின் சமூக ஊடகப் பக்கங்களில் அதிகம் பேசப்படும் விடயம் இதுவே.

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை
தாம் விரும்பிய தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆரம்பித்து, தற்சமயம் மாற்றுத் தரப்பு மீதான வன்மத்தைக் கக்குவதாக நகர்கின்றது. இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.
தமிழகத் தலைவர்களோடு தொடர்புகளும் உறவுகளும் இருப்பது தவறல்ல. அது தேவையானதும் கூட. ஆனால் எதிர்ப்பது ஒன்றுக்குப் பல தடவை சிந்தித்து செயற்பட வேண்டிய விடயம். விடுதலையை வேண்டும் ஈழத் தமிழினத்துக்கு, இத்தருணத்தில் தமிழகத்தின் ஆதரவு தவிர்க்க முடியாதது என்பதை நினைவில் கொள்வோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தபோதும், தமிழீழ விடுதலைப் புலிகள் எத்தருணத்திலும் எம்.ஜி.ஆரின் அரசியல் போட்டியாளரான முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களைப் பகிரங்கமாக எதிர்க்கவோ விமர்சிக்கவோ இல்லை என்பதை அனுபவப் பாடமாகக் கொள்வோம். ஈழத்தில் விஜய் அவர்களின் ரசிகர்கள் சீமான் அவர்களைத் தூற்றவேண்டியதில்லை.
சீமான் அவர்களின் ஆதரவாளர்கள் விஜய் அவர்களை எதிர்க்க வேண்டியதுமில்லை. ஈழத் தமிழர்களுக்கு இத்தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதை நினைவில் நிறுத்துவோம்.
இதை வைத்து ஈழத் தமிழினத்தைக் கூறுபோடவும் இனப்படுகொலையைத் திசைதிருப்பவும் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களான தமிழ் எட்டப்பர்களான அரசியல் கோமாளிகளும் போடும் திட்டத்திற்கு பலிக்கடா ஆவதைத் தவிர்ப்போம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆட்சிப் பணி சிறக்கட்டும். அண்ணன் சீமானின் தமிழ்த் தேசியப் பணி செழிக்கட்டும். இலங்கை அரசினதும் முகவர்களான குறளிவித்தைக் கோமாளிகளதும் கூத்துக்களை இனியாவது ஈழத் தமிழினம் உணர்ந்து தெளியட்டும். இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை என்றும் சட்டத்தரணி சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.