பலி கேட்கிறதா பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்!
டித்வா புயலால் இலங்கை பெரும் பேரழிவை சந்தித்துள்ள நிலையில் பருவ நிலை மாற்றத்தால் இப்பேரழிவுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை , உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகள், நிகழாண்டில் கடுமையான வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பருவநிலை மாற்றத்தால் தாமதமாக உருவான புயல்களும் அதனிடையே பெய்த கனமழையும் கடுமையான பேரழிவுக்கு வழிவகுத்துள்ளன.

அந்தவகையில் இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நேரிட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 1,400-க்கும் அதிகமான உயிர்ப் பலிகளும் நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 'காணாமல்போன' நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.
ஆசிய நாடுகளில் புயல், வெள்ளம்
இந்நிலையில் ஆசிய நாடுகளில் புயல், வெள்ளம் ஆகியவை பருவநிலை மாற்றத்தின் இயல்புதான் என காலநிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைக்கும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு கடந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததே காலநிலை மாற்றத்திற்கான காரணம் என ஐக்கிய நாடுகள் அவையின் உலக வானிலை அமைப்பு கூறுகிறது.
உலகில் சராசரியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், ஆசிய நாடுகள் இத்தகைய பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடல் மட்டம் உயர்வதும் அதிகளவிலான புயல்கள் உருவாகக் காரணம் என்றும், புவி வெப்பமயமாதலால் கடலின் வெப்பமும் அதிகரித்துப் புயல்களைத் தீவிரத் தன்மையுடன் வைத்திருப்பதாகவும் ஹாங்காங் நகர பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் பெஞ்சமின் ஹார்டன் கூறுகிறார்.
கடல்நீர் அதிக வெப்பமடைதல்
பருவநிலை மாற்றத்தால் காற்று மற்றும் கடல்நீர் பாதிக்கப்படுவதாலே, ஓராண்டில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகின்றன.
கடல்நீர் அதிக வெப்பமடைதல் என்று கூறப்படக் கூடிய எல் நினோ (El Nino) மாற்றத்தாலும் நிகழ்கிறது. அதேவேளை 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமியால் ஏற்பட்ட பேரலையில் சிக்கி 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2000 ஆம் ஆண்டு முதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மாகாணங்களான ஆச்சே, வடக்கு சுமத்ரா மற்றும் மேற்கு சுமத்ரா ஆகிய பகுதிகளில் 19,600 சதுர கி.மீ. அளவுக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளால் மட்டும், ஆண்டுதோறும் பல கோடிக் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுகின்றது.
கடந்த மாதம் பிரேசிலில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில், தொடர்ந்து அதிகரித்து வரும் காலநிலை மாற்ற பேரழிவுகளால் சிக்கித் தவிக்கும் நாடுகளுக்கான நிதியுதவியை 1.3 டிரில்லியனாக மூன்று மடங்கு உயர்த்துவதாகவும் 2035 ஆம் ஆண்டுக்குள் கிடைக்கச் செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தெற்காசிய நாடுகளில் நிகழ்ந்த பருவநிலை மாற்றத்தால் பலர் பலியான சூழலிலும் அதனை எதிர்கொள்வதற்கு அரசுகள் தயாராகவும், போதிய விழிப்புணர்வுமின்றி இருப்பதாகவும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.