சூதாட்ட விடுதியில் அதிகாலையில் பொலிஸாருக்கு நடந்த சம்பவம்
அம்பாந்தோட்டை, சூரியவெவ, கோன்கெட்டியார பகுதியில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்றைச் சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோன்கெட்டியார பகுதியில் சூதாட்ட விடுதி ஒன்று இயங்கி வருவதாக சூரியவெவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலை விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்டது.

மேலதிக விசாரணை
இதன்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் ஒன்று, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், இரு அதிகாரிகளைத் தாக்கி அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் சிகிச்சைக்காக சூரியவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கடமையைச் செய்யவிடாது தடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சூரியவெவ, வெலிஆர மற்றும் தர்மிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.