உக்ரைன் தலைநகரை சுற்றி 900 பொதுமக்கள் கொன்று குவிப்பு: ரஷ்யா தீவிரம்
ரஷ்ய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததையடுத்து, ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்ய துருப்புகள் கிழக்கு உக்ரைனில் புதிய தாக்குதலுக்கு ஆயத்தமாகியுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான மரியுபோலிலும் தாக்குதல் தொடர்கிறது. வடகிழக்கு நகரமான கார்கிவில், குடியிருப்பு பகுதிகள் மீது ஷெல் குண்டுகளை வீசியதில் 7 மாத குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் ஓலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தலைநகர் கீவ்க்கு வெளியே 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். கீவ் நகரை சுற்றி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே உடல்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், பல உடல்கள் தற்காலிகமாக புதைக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததை தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடனான போரில் 2500 முதல் 3000 வரையிலான உக்ரைன் படையினர் இறந்திருப்பதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்ய தரப்பில் 18,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் போருக்கு அஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        