யாழில் வாடகைக்கார் கொடுத்தவர் ; வாங்கியவரிடம் ஈடுவைத்த நபர்; சிஐடி இடம் சிக்கிய மூவர்!
வாடகைக்காரைக் கடன் வாங்கியவரிடம் ஈடுவைத்த நபர், அதற்கு உதவிய இருவர் என்று 3 பேர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பிரதேசத்தில் காரை வாடகைக்கு கொடுப்பவரிடம் ஒரு மாதத்துக்கு முன்னர் காரை வாடகைக்குப் பெற்றுள்ளனர்.
அதற்காக ஒரு இலட்சம் ரூபா முற்பணம் கொடுத்து காரைக் கொண்டு சென்ற சில நாட்களின் பின்னர் காரிலிருந்து ஜி.பி.எஸ். கருவி அகற்றப்பட்டுள்ளது.
விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு
அத்துடன் வாடகைக்கு எடுத்துச் சென்றவர்களும் தொடர்பைத் துண்டித்துள்ளனர். இதையடுத்து காரின் உரிமையாளர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர்கள் அது தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மேற்படி கார் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தம்மிடம் வாங்கிய 65 இலட்சம் ரூபா கடன் பணத்துக்கு இந்தக் காரை ஈடுவைத்துள்ளார் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து காரை வாடகைக்குப் பெற்றுச் சென்றவர், அதற்குச் சாரதியாகச் செயற்பட்டவர் மற்றும் ஈடுவைப்பதற்கு உதவிய (கடன் வழங்கியவரின் உறவினர்) ஆகியோரைப் பொலிஸார் கைது செய்தனர்.