சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல்!
சீனாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளியேற்ற முயன்ற சீன நாட்டவர்கள் மூவர் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் சீனாவில் கட்டுமானத்துறையில் பணியாற்றும் 38, 41 மற்றும் 45 வயதுடைய நபர்களாவர்.

79 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள்
இவர்கள் இன்றைய தினம் அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 'எயார் ஏஷியா' விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த 03 பயணப் பொதிகளைப் பரிசோதித்த போது, 79 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த 53,000 சிகரெட்டுகளைக் கொண்ட 265 சிகரெட் கார்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து, சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.