CID க்கு பயந்து நாட்டைவிட்டு ஓடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!
கொலைக் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையின் போதே இத்தகவல் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை
கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்வதைத் தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையைக் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுகளுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கச் சென்றபோதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த ஓகஸ்ட் மாதமே வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இருப்பினும், பிரேமலால் ஜயசேகர மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்த பின்னரே இந்த வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கூட்டமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.