ரணிலை நாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தது சரியான முடிவு-பசில் ராஜபக்ச
69 லட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதாகவும் தாம் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததாகவும் அவர் சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் அந்த கட்சியின் நான்காவது ஆண்டு நிறைவு இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே பசில் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
கட்சி என்ற வகையில் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயார்
அதிகாரபூர்வமாக பார்த்தால், தேர்தல் ஒன்றுக்கான காலம் வந்துள்ளது. அது எப்படி நடக்கும் என்று தெரியாது. கட்சி என்ற வகையில் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். தேர்தல் என்பது மக்களின் விருப்பம்.
இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெற்றோம். இதற்காக முழு இலங்கை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நூற்றுக்கு நூறு வீதம் எங்களால் நிறைவேற்ற முடியாது போயிருந்தால், அது குறித்து வருத்தப்படுகின்றோம். எம்மிடம் இருந்த குறைகளை சரி செய்துக்கொண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு நாட்டின் ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்பது தடை செய்யப்பட்டுள்ளதால், நான் அரச ஆட்சி நிர்வாகத்தில் இல்லாவிட்டாலும் நேரடியான அரசியலில் இருப்பேன்.
சட்டப்படி நான் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது. இதனால், நான் கவலைப்படவில்லை, மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எமது மக்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் 69 லட்சம் வாக்குகளை வழங்கி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தது சரியான முடிவு
அவர் பதவி விலகினார். இதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய வேண்டும். அப்போது அந்த பதவிக்கு மிகப் பொருத்தமானவரை தெரிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம். அந்த தெரிவு சரியானது என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்த நிலைப்பாடு.
அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியலில் ஈடுபட சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி நாங்கள் வீதியில் இறங்கி அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளார். பொருளாதார பிரச்சினை உட்பட ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பார் என்ற பெரிய நம்பிக்கை எமக்குள்ளது எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.