கொத்தல ஹிம்புட்டுவை கடத்த முற்பட்ட சீனர் அதிரடியாக கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சீனாவுக்கு கொத்தல ஹிம்புட்டு தாவரத்தை கடத்த முயன்ற சீன நாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான 48 கிலோகிராம் கொத்தல ஹிம்புட்டுத் தாவரத் தொகுதியை சட்டவிரோதமாக சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற போதே இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது முற்றாகத் தடை
கைது செய்யப்பட்டவர் இலங்கைக்கு சுற்றுலா நிமித்தம் வருகை தந்த 30 வயதுடைய சீனப் பிரஜையாவார். இவர் இன்று அதிகாலை 01:20 மணியளவில் சீனாவிற்குச் செல்லும் 'சைனா ஈஸ்டர்ன்' விமான சேவைக்குச் சொந்தமான MU-714 என்ற விமானத்தில் பயணிக்க வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48 கிலோகிராம் 600 கிராம் எடையுடைய கொத்தல ஹிம்புட்டு துண்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுங்க அதிகாரிகள், குறித்த தாவரத் தொகுதியை அரசுடமையாக்கியதுடன், கைதான சீனப் பிரஜைக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
அதேவேளை இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், கொத்தல ஹிம்புட்டு ஒரு பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும். இதனை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.