தீவிரமடையும் ரஸ்யா - உக்ரைன் யுத்தம்! திடீரென இந்தியா சென்ற சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின் முதல் முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த மாத இறுதியில் இந்தியா வர வாய்ப்புள்ளது.
அப்போது இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவிடம், சீனா அடிக்கடி எல்லையில் வாலாட்டுகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தாலும் சீனா தனது நடவடிக்கையை மாற்றி கொள்வது இல்லை.
இதனால் இருநாடுகளின் உறவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா-சீன எல்லையில் அவ்வப்போது பதற்றமும் நிலவி வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவங்களும் எல்லையில் எப்போதும் உஷராகவே உள்ளன.
2020 மே 5ல் இந்தியா- சீனா இடையே பாங்காங் ஏரி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் நடந்தது. அதேபோல் 2020 ஜூன் மாதம் 15ல் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மொத்தம் 42 சீன வீரர்கள் இறந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த மாத துவக்கத்தில், ‛‛எல்லை தொடர்பான பிரச்சனைகளால் இந்தியா-சீனா உறவில் பிரச்சனை உள்ளது. இதுகுறித்து நியாயமான முறையில் பேசி தீர்க்க வேண்டும்.
சில சக்திகள் இந்தியா-சீனா இடையே பதற்றத்தை ஏற்படுத்துகின்றன‛‛ எனக்கூறியிருந்தார். இதன்மூலம் அமெரிக்காவை அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா, சீனா இடையே ராணுவ அதிகாரிகள் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை நீண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேபாளம் செல்ல உள்ளார். அந்த பயணத்தை முடித்து அவர் இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்தியா வரும் பட்சத்தில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனை குறித்து பேச வாய்ப்புள்ளது. மேலும் எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவ இந்தியா-சீனா இடையே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
லடாக் மோதலுக்கு பிறகு முதல் முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயின் இந்திய வருகை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இந்தியா-சீனா உறவு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், சீனா ஒப்பந்தங்களை மீறி எல்லை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
இருநாடுகளுக்கு இடையேயான உறவு பின்னடைவை சந்தித்துள்ளது. எல்லை பிரச்சனைக்கான தீர்வே இருநாட்டின் உறவை தீர்மானிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் ஒரு சிறு பகுதியையும் சீனாவுக்கு விட்டு கொடுக்கமாட்டோம்'' என பல நிலைகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.