விமானத்தில் இலங்கை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி; பெரும் தொகை பணத்தை இழந்து தவிப்பு
டுபாயில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் இலங்கை பெண் ஒருவரிடமிருந்து பெரும் தொகை பணம், நகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காட்டிக்கொடுத்த கேமரா
இஸ்ரேலில் குழந்தை சுகாதார ஆலோசகராக பணி புரியும் போரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயது இலங்கைப் பெண்ணின் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை சீன நாட்டவர் திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்று காலை 08.15 மணிக்கு ப்ளைடுபாய் FZ விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ளார். விமானப் பணிப்பெண்ணின் வேண்டுகோளின் பேரில் அந்தப் பெண் கொண்டு வந்த கைப்பை விமானத்தில் அவரது இருக்கைக்கு மேலே உள்ள பொதி வைக்கும் இடத்தில் வைத்துள்ளார்.

விமானத்திலிருந்து வெளியே வந்த பெண் விமான நிலைய வாடகை வாகனத்திற்கு பணம் செலுத்தவிருந்தபோது, 3,660 அமெரிக்க டொலர்கள், 500 யூரோக்கள் மற்றும் அவரது கைப்பையில் இருந்த இலங்கை பணம் காணாமல் போனமை தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பெண்ணுடன் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்தனர்.
சீனப் பெண் விடுதியில் மறைந்திருந்த நபர்
இதன்போது பெண்ணின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு சீன நாட்டவரை பொலிஸார் அடையாளம் காண முடிந்தது.
பின்னர், அவரைப் பற்றிய விபரங்களைக் கண்டறிந்த பொலிஸார் சந்தேக நபர் கிம்புலப்பிட்டி பகுதியில் ஒரு சீனப் பெண் நடத்தும் விடுதியில் மறைந்திருந்தபோது, அவரைக் கைது செய்துள்ளனர்.

25 வயதான சீன நாட்டவர் இந்த வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை அவர் தூங்கிக் கொண்டிருந்த தலையணை உறையில் மறைத்து வைத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.