இந்தியாவிற்கு தீடிரென வந்த சீனாவின் உயர்மட்ட அதிகாரி! ஏதற்காக தெரியுமா?
இந்தியா விஜயம் செய்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, (Wang Yi ) நாளை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (S.Jaishankar) ஆகியோரை சந்திக்க உள்ளார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இன்று வியாழக்கிழமை (24-03-2022) இந்தியா வந்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பின்னர், சீன உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும்.
இவரது இந்த பயணம் கடைசி வரை நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தது. அவரது விமானம் தரையிறங்கும் வரையில் கூட அவரது வருகை உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.
சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டார்.
அந்த மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய வாங் யீ, "காஷ்மீர் விவகாரத்தில், பல இஸ்லாமிய நண்பர்களுடன் ஆலோசித்துள்ளோம். சீனா இந்த விவகாரத்தைப் புரிந்து கொள்கிறது" என்றார். வாங் யீ-இன் இந்தக் கருத்திற்கு இந்தியா சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் இந்த விவகாரத்தில் சீனா கருத்து கூற எந்த தேவையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சூழலில், சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயின் கருத்துக்கள் தேவையற்றது என்றும் இந்தியா தெரிவித்திருந்தது. இதன் காரணமாகவே அமைச்சர் வாங் யீ-இன் வருகை கடைசி வரை உறுதி செய்யப்படாமலேயே இருந்தது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்,
"சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியா குறித்துத் தெரிவித்ததை நாங்கள் நிராகரிக்கிறோம். ஜம்மு & காஷ்மீர் விவகாரம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம். இதில் சீனா உட்பட மற்ற நாடுகளுக்குக் கருத்து தெரிவிக்க எந்த இடமும் இல்லை.
பிற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியா எந்தவொரு கருத்துகளையும் தெரிவிப்பதில்லை என்பதைப் பிற நாடுகள் கவனிக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வருவதற்கு முன்னர், வாங் யீ ஆப்கனுக்கு திட்டமிடப்படாத பயணத்தை மேற்கொண்டார். அங்குள்ள தாலிபான் ஆட்சியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
அரசியல், பொருளாதாரம் மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவின் சிறப்புத் தூதர் ஜமீர் கபுலோ ஆப்கன் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான உறவே நிலவி வருகிறது. குறிப்பாகக் கடந்த 2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், நிலைமை மிக மோசமானது.
அதன் பின்னர் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற ராஜதந்திர மற்றும் ராணுவ பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, நிலைமை மெல்ல சீரடைந்து வந்தது. பேச்சுவார்த்தைக்குப் பின்னரே எல்லையில் குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் வாபஸ் பெறப்பட்டனர்.