ரஷ்யாவிற்கு உதவினால் விளைவுகள் பெரிதாக இருக்கும்! சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யாவிற்கு சீனா பொருள் உதவி வழங்கினால், “தாக்கங்கள் மற்றும் விளைவுகள்” குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை (Xi Jinping) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தகவலை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அதிகரித்து வரும் உக்கிரமான தாக்குதலுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவதன் மூலமோ அல்லது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதன் மூலமோ – சீனா ரஷ்யாவின் உதவிக்கு வரக்கூடும் என்ற அமெரிக்க கவலைகளுக்கு மத்தியில் இரு தலைவர்களும் காணொளியில் அழைப்பில் பேசினர்.
சுமார் 2 மணித்தியாலங்கள் இருவரும் பேசினர். சீனாவின் அரச ஊடகமான சிசிரிவி, அழைப்பின் போது, “நாடுகளிற்கு இடையிலான உறவுகள் ராணுவப் பகைமை நிலைக்குச் செல்ல முடியாது” என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாகத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனில் ரஷ்யாவின் உதவிக்கு சீனா வந்தால், ஏற்படும் விளைவுகள் பற்றி சீனாவின் ஜனாதிபதி ஜியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்ததாக அமெரிக்கா குறிப்பிட்ட நிலையில், “தாக்கங்கள் மற்றும் விளைவுகள்” பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.
அழைப்பில் இருந்து கூடுதல் விவரங்களை வெளியிட அமெரிக்கா விரும்பாதது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியிடம் கேட்டபோது, ”இதில் ஈடுபடுவதற்கும் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்துவதற்கும் இது மிகவும் ஆக்கபூர்வமான வழி என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.