சிறுவர் கடத்தல் பதிவு போலியானது; பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்
சிறுவர்களைக் கடத்த முற்பட்ட குழுக்கள் தொடர்பாக அக்மீமன பொலிஸார் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவு தொடர்பில் பொலிஸ் இன்று (18) விளக்கம் அளித்துள்ளது.
அக்மீமன பொலிஸாரினால் அவ்வாறான எந்தவொரு பொது அறிவித்தலையும் வெளியிடவில்லை என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் கடத்தல்கள்
குறித்த சமூக ஊடகப் பதிவு ‘போலியானது’ என பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
அக்மீமன அல்லது யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் இதுபோன்ற சிறுவர் கடத்தல்கள் அல்லது கடத்தல் முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என அக்மீமன பொலிஸ் பொறுப்பதிகாரியை (OIC) மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான, பொய்யான பதிவுகளால் பொதுமக்கள் எவரும் பீதியடைய வேண்டாம் என பொலிஸ் கோரியுள்ளது.